இலட்சுமணனின் வீரமும் தியாகமும்(LAKSHMAN'S SACRIFICE)
இந்தியாவின் மாபெரும் இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம். இராமாயணக் காதையில் இராமருக்கு பக்கபலமாகவும், துணையாகவும் இருந்த இலட்சுமணனைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். இவர் ஆதிஷேசனின் அவதாரம் ஆவார்.
இராமாயணத்தில்
கூனியின் துர்போதனையைக் கேட்டு கைகேயி இராமரைப் பதினான்கு வருடம் வனவாசம் செல்லப் பணித்தாள். இராமர் பதினான்கு வருடம் வனவாசம் செல்ல முடிவு செய்த போது,அவருக்குத் துணையாகத் தானும் வருவதாக இலட்சுமணன் கூறினார். இராமரும் தம் தமையனின் அன்பின் மிகுதியை எண்ணி, இலட்சுமணனைத் தன்னோடு கானகம் அழைத்துச் செல்ல சம்மதம் தெரிவித்தார். எனவே சீதா இராமரோடு இலட்சுமணனும் மரவுரி தரித்து, கானகம் புறப்பட்டார்.
இலட்சுமணன்
தன் மனைவியாகிய ஊர்மிளையிடம், இராமரோடு தான் கானகம் செல்லும் செய்தியைக் கூறினார். உடனே ஊர்மிளை தானும் இலட்சுமணனோடு வருவதாகத்
தன் விருப்பத்தைத் தெரிவித்தாள். அதற்கு இலட்சுமணன்
ஊர்மிளையிடம், தான் இராமருக்கும், சீதைக்கும் துணையாக கானகம் செல்வதாகவும், வனத்தில் அவர்களுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து, இரவும்
பகலும் தூங்காமல் இருந்து, அவர்களைப் பாதுகாக்க விரும்புவதாகவும் கூறினார்.
எனவே
தூக்கத்தின் தேவதையான நித்திரா தேவியைப் பிரார்த்தனை செய்து அழைத்தார். தூக்கத்தின்
"அதிதேவதையான நித்திரா தேவி" இலட்சுமணனின்
பணிவினையும், தன்னடக்கத்தையும் கண்டு மகிழ்ந்து இலட்சுமணன் முன் தோன்றினார்.
நித்திரா
தேவி இலட்சுமணனிடம், "உனது உறக்கத்தை வேறு யாராவது பெற்றுக் கொண்டால், நீ பதினான்கு வருடம்
உறங்காமல் இருந்து இராமசீதைக்குக் காவலாக இருக்க முடியும். உனது உறக்கத்தினைப் பெற்றுக் கொள்பவர் யார்?" என்று கேட்டார்.
உடனே
இலட்சுமணன் தம் மனைவியிடம், "ஊர்மிளா! உன்னிடம் ஓர் வரம் வேண்டுகிறேன். கானகத்தில் இராமசீதைக்கு பக்க பலமாகவும், துணையாகவும் இருக்க எனது உறக்கத்தினை நீ பெற்றுக் கொள்வாயா?"
என்று கேட்டார்.
ஊர்மிளை
இலட்சுமணனின் விருப்பத்திற்கு மகிழ்வுடன் இசைந்தாள். அவள்
பதினான்கு
வருடங்கள் அயோத்தி அரண்மனையில் உறக்கத்தில் இருந்தாள். அவள் தன் கணவன் இலட்சுமணன் சீதா இராமரோடு அயோத்தி திரும்பிய அன்று உறக்கத்தில் இருந்து கண் விழித்து எழுந்தாள். ஊர்மிளை பதினான்கு வருடங்கள் நீண்ட நித்திரையிலிருந்து இலட்சுமணனுக்கு உதவியதால், இலட்சுமணன் இராமருக்கு பக்கபலமாகவும், துணையாகவும் இருந்தார்.
இந்திரஜித்
வதம்
இராமர்
இராவணனை அழிக்க வேண்டுமானால் முதலில் இந்திரஜுத்தை அழிக்க வேண்டும். ஆனால் இந்திரஜித் யாராலும் வெல்ல முடியாத வரம் ஒன்றினைப் பெற்றிருந்தான். அவ்வரம் யாதெனில் "எவரொருவர் பதினான்கு ஆண்டுகள் உறங்காமல் இருக்கிறார்களோ, அவராலேயே மரணம் நிகழ வேண்டும்" என்பதாகும்.இலட்சுமணன் பதினான்கு ஆண்டுகள் உறங்காமல் இருந்த காரணத்தால், இந்திரஜித்தை போரில் வென்று இராமருக்கு மிகப் பெரிய பலமாக இருந்தார்.
ஆதிஷேசனின்
அவதாரமாகிய இலட்சுமணன், வீரத்திலும், தியாகத்திலும், அன்பிலும் சிறந்து விளங்கினார்.