காற்றாலைகளின் வர்ணம் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் தாக்கம்
காற்றாலைகளின் இறக்கைகளில் ஒன்றிற்கு மட்டும் கருப்பு நிறத்தில் வர்ணம் பூசுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
நார்வே நாட்டில் உள்ள விஞ்ஞானிகள் காற்றாலைகளின் மூன்று இறக்கைகளில் ஒன்றிற்கு மட்டும் கருப்பு நிறத்தில் வர்ணம் பூசியுள்ளனர். இந்த சிறிய மட்டும் எளிய மாற்றத்தினால் காற்றாலையில் மோதி உயிரிழக்கும் பறவைகளின் எண்ணிக்கை 70% குறைந்துள்ளதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றன. நார்வே இயற்கை ஆராய்ச்சி நிறுவனம் (NORWEGIAN INSTITUTE FOR NATURE RESEARCH) இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது.
பறவைகள் ஏன் காற்றாலைகளில் மோதுகின்றன?
காற்றாலையின் மூன்று இறக்கைகளும் ஒரே மாதிரியான வெள்ளை நிறத்தில் இருக்கும் போது, அவை அதிவேகமாக சுழலும் போது பறவைகளின் கண்களுக்கு அது நிலையான வெற்று இடமாக அல்லது மங்கலான வடிவமாக (MOTION SMEAR) மட்டுமே தோன்றும். பறவைகளுக்கு நேராகப் பார்க்கும் திறனை விட பக்கவாட்டுப் பார்வை (PERIPHERAL VISION) அதிகம் என்பதால், தங்களுக்கு முன்னால் இருக்கும் ஆபத்தை அவை உணராமல் நேராகச் சென்று மோதி விடுகின்றன.
கருப்பு நிறத்தின் பின் உள்ள அறிவியல்
நார்வே நாட்டின் ஸ்மோலா (SMOLA) என்ற பகுதியில் உள்ள காற்றாலைகளில், மூன்று இறக்கைகளில் ஒன்றை மட்டும் கருப்பு நிறத்தில் வர்ணம் பூசியுள்ளனர். இந்த நிற வேறுபாடு காரணமாக, இறக்கைகள் சுழலும் போது ஏற்படும் மங்கலான தோற்றம் மறைந்து, பறவைகளுக்கு இறக்கைகள் தெளிவாகத் தெரிகின்றன.
அடித்தளத்தில் மாற்றம்
இறக்கைகள் மட்டுமின்றி காற்றாலையின் தூணின் கீழ் பகுதியை (TOWER BASE) கருப்பு நிறமாக்குவதன் மூலமும் சில பறவை உயிரினங்களின் உயிரிழப்பைக் குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நீண்ட கால ஆய்வு
விஞ்ஞானிகள் இந்த முடிவை எட்டுவதற்கு 10 ஆண்டு கால ஆராய்ச்சி செய்துள்ளனர். அதாவது காற்றாலைகளில் வர்ணம் பூசுவதற்கு முன்பு 7 ஆண்டுகள், வர்ணம் பூசிய பின் 3 ஆண்டுகள் என மொத்தம் 10 ஆண்டுகள் பறவைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து இந்த முடிவை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
ஆய்வு முடிவுகளால் உண்டான நன்மைகள்
இந்த ஆய்வின் மூலம் காற்றாலைகளில் மோதி இறக்கும் பறவைகளின் எண்ணிக்கை 70% வரை குறைந்துள்ளது. குறிப்பாக (WHITE TAILED EAGLES) எனப்படும் கடல் பருந்துகள் மற்றும் பிற வேட்டைப் பறவைகள் இறப்பது பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது.
காற்றலைகளின் வடிவமைப்பை மாற்றாமல் மிகக் குறைந்து செலவில் வர்ணத்தை மாற்றுவதன் மூலம் மட்டுமே பறவைகள் உயிரைக் காப்பாற்ற முடியும்.
இம்முறையை ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் உயரமான காற்றாலைகளில் ஏறி வர்ணம் பூசுவது கடினமானது. எனவே இனி வரும் காலங்களில் காற்றாலைகளைத் தயாரிக்கும் போதே தொழிற்சாலைகளில் ஒரு இறக்கைக்கு கருப்பு நிறம் பூசுவது சிறந்தது என விஞ்ஞானிகள் பரிந்துரை செய்கிறார்கள்.
இந்த சிறிய மாற்றம் சுற்றுச் சூழலில் நன்மைகள் உண்டாக்கும் என்பது சுற்றுச் சூழல் தொழில் நுட்பம் (ECO FRIENDLY TECHNOLOGY) சார்ந்த ஆய்வின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment