அண்ணாமலையார் கோவில் ஏற்காடு (YERCAUD ANNAMALAIYAR TEMPLE)
இயற்கை எழில் சூழ்ந்த சேர்வராயன் மலைத்தொடரில் அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ளது. விண்ணைத் தொடும் நெடிய மரங்களுக்கும், அழகிய மலைத் தொடர்களுக்கும் நடுவே அண்ணாமலையார் கோவில் அமைதியின் இருப்பிடமாக விளங்குகிறது.
இக்கோவில் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது. கோவிலின் கட்டமைப்பு திராவிடக் கட்டிடக் கலையைக் கொண்டு அமைந்துள்ளது.
மூலவராக அண்ணாமலையார் காட்சியளிக்கிறார். இடப்புறத்தில் விநாயகப் பெருமானும், வலப்புறத்தில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார்கள். இவ்வாலயத்தில் கோபுரங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் வண்ண மயமாக காட்சி அளிக்கின்றன. கோபுரங்களில் சிற்ப வேலைப்பாடுகள் திராவிட கட்டிடக் கலையின் உன்னததை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.
அண்ணாமலையார் கோவிலில் விளக்கு கோபுரம் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. பௌர்ணமி நாட்களில் விளக்குகள் ஒளிர்ந்து வண்ண மயமாகக் காட்சி அளிக்கின்றது. இங்கு மகா சிவராத்திரி வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.
அதிகாலை நேரமும், அந்தி மாலை நேரமும் அண்ணாமலையாரை தரிசனம் செய்வது மனம் மயக்கும் அழகிய அனுபவத்தை நமக்கு அளிக்கும். இப்பழமையான சிவாலயம் தமிழ் மண்ணின் வளமான பராம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.





Comments
Post a Comment