முகிற்பேழ் மழை என்கின்ற மேகவெடிப்பு (CLOUDBURST)
மிகச் சில நிமிடங்களில் அதிக அளவிலான மழை பொழிவதால், இவ்வகை மழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு இயற்கை பேரிடருக்கு வழிவகுக்கிறது. நிலத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் உயரத்திற்கு மேலிருக்கும் மேகங்களில் இருந்தே முகிற்பேழ் மழை உருவாவதாக வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேக வெடிப்பு காரணங்களாகக் கூறப்படுவன
காலநிலை மாற்றத்தால் புவி வெப்பமாகி கடுமையான வெப்பச்சலனம் ஏற்படுகிறது. இதனால் இடியுடன் கூடிய புயல் மழை, ஆலங்கட்டி மழை, மேக வெடிப்புகள் ஏற்படுகின்றன.
நிலம் சூடாகும் போது நிலத்திலுள்ள நீரும் சூடாகும். நீர் சூடாகும் போது விரிவடைந்து ஆவியாகும். நீர் ஆவியாகையில் அந்த இடத்தில் அழுத்தம் குறையும். எடை குறைவாக உள்ள நீராவி நிலத்தை விட்டு மேலே செல்லும். நீராவி உயரம் ஏற ஏற வெப்ப நிலை குறையும். 15 கிலோ மீட்டர் உயரத்தில் நீராவி குளிர்ந்து அங்கேயே மேகமாக மாறும். நீர்த் திவலைகள் சேர்ந்து எடை கூடும் போது மேகங்களின் மேல் குளிர் காற்று வீசினால் மழை பொழியும்.
வெப்பச் சலனத்தால் இந்த நிகழ்வுகள் அனைத்தும் மிகக் குறுகிய நேரத்தில் நடந்து, குறைந்த நேரத்தில் மிக அதி தீவிரமாக மழைப் பொழிவதே முகிற்பேழ் மழை அல்லது மேக வெடிப்பு. புவி வெப்பமயமாவதால் இவ்வகையான மேக வெடிப்பு நிகழ்வுகள் அடிக்கடி நிகழும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்திய வானிலையைப் பொருத்த வரை இத்தகைய மேக வெடிப்புகள் பெரும்பாலும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் தான் நிகழ்ந்துள்ளன. முகிற்பேழ் மழை அல்லது மேக வெடிப்பு எப்போது எங்கு நிகழும் என்பதை துல்லியமாக கணிக்க முடியாது என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் இமயமலைப் பகுதிகளில் இத்தகைய மேக வெடிப்புகள் அதிகமாக நிகழ்கின்றன.
Comments
Post a Comment