கேதார்நாத் ஆலயம் (KEDARNATH TEMPLE)
இந்தியாவில் உள்ள பன்னிரண்டு சோதிர்லிங்க சிவத்தலங்களில் ஒன்று கேதார்நாத் கோவில் ஆகும். இவ்வாலயம் உத்திராகாண்ட் மாநிலத்தில், மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் சிவாலிக் மலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஆறு மாதங்கள் மட்டுமே (ஏப்ரல் மாதம் முதல் தீபாவளித் திருநாள் வரை) பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டிருக்கும். குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் குப்தகாசியில் உள்ள உகிமத் மடத்திற்கு கொண்டு வரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன.
இக்கோவில் கங்கையின் கிளை நதிகளுள் ஒன்றான மந்தாகினி நதிக்கரையோரம் அமைந்துள்ளது. கோவிலானது கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் பனிபடர்ந்த மலைகளும் பனியாறுகளும் சூழ்ந்த பீடபூமி மீது அமைந்துள்ளது. இக்கோவிலை நேரடியாக சாலை வழியாக அணுக முடியாது. கௌரிகுண்ட் என்னுமிடத்திலிருந்து 14 கி.மீ நடைபயணமாகவோ அல்லது குதிரையிலோ அல்லது பல்லக்குச் சேவைகளின் மூலமாகவோ மேற்பகுதிக்குச் செல்ல வேண்டும். இக்கோவில் திருஞான சம்பந்தராலும், சுந்தரராலும் தேவாரப் பாடல் பாடப் பெற்ற வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
இக்கோவில் எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் இவ்விடத்திற்கு வந்த போது கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்றையக் கோவில் பாண்டவர்கள் கோயில் எழுப்பிய இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
கோயில் புராணம்
மகாபாரதப் போரில் பாண்டவர்கள் தங்கள் உறவினர்களையும், ஏராளமான உயிர்களையும் கொன்றதனால் ஏற்பட்ட பாவத்தை போக்கிக் கொள்ள இமயமலையில் உள்ள சிவபெருமானைத் தேடிச் சென்றனர். இறுதியாக அவர்கள் கேதார்நாத் பகுதியை வந்தடைந்த போது அங்கு ஒரு பெரியகாட்டெருமையை க் கண்டார்கள். அந்த எருமையானது பீமனுடன் சண்டையிட்டது. அச்சண்டையில் பீமன் தனது கதாயுதத்தைக் கொண்டு அக்காட்டெருமையைத் தாக்க முயன்றான். ஆனால் அது சாதுரியமாகப் பீமனின் பிடியில் இருந்து தப்பிவிட்டது. ஆனால் பீமனின் கதாயுதம் அதன் முகத்தில் தாக்கியது. அக்காட்டெருமை தனது முகத்தை நிலத்தில் இருந்த பிளவு ஒன்றில் மறைத்துக் கொண்டது. பீமன் அதன் வாலைப் பிடித்து இழுக்க முயன்றான். அப்போது அக்காட்டெருமை இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதி நேபாளத்தில் விழுந்தது. அவ்விடம் தற்போது நேபாளில் தோலேஷ்வர் மகாதேவ் என்று வழங்கப்படுகிறது. அக்காட்டெருமையின் உடற்பகுதி கேதார்நாத்தில் இருந்தது.
காட்டெருமையின் உடற்பகுதி இருந்த இடத்தில் ஒரு சோதிர்லிங்கம் உண்டானது. அதன் ஒளியில் இருந்து சிவபெருமான் பாண்டவர்களுக்குக் காட்சியளித்து அவர்களின் பாவத்தைப் போக்கினார். அந்த முக்கோண வடிவ சோதிர்லிங்கம் கேதார்நாத் கோயில் கருவறையில் உள்ளது. அவர் கேதாரேஷ்வரர் என்று போற்றப்படுகிறார்.
பீமன் தான் சிவபெருமானோடு சண்டையிட்டோம் என்பதை உணர்ந்து மிகுந்த மன வருத்ததிற்கு உள்ளாகி சிவனாரிடம் மன்னிப்புக் கேட்டார்.
சிவபெருமான் கேதாரேஷ்வரராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
Comments
Post a Comment