திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோயில் (THIRUCHENDUR MURUGAN TEMPLE)
முருகனின்
அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் விளங்குகின்றது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களில் "சேயோன்" எனக் குறிப்பிடப்படுகிறது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000, 3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகப் பெருமானின் படை வீடுகள் அனைத்தும் மலைகளில் அமைந்திருக்க இத்திருத்தலம் வங்காள விரிகுடா அருகில் அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பு ஆகும்.
திருச்செந்தூர் என்றால் செழிப்பான நகரம் என்று பொருள். தமிழ் இலக்கியங்களில் திருச்சீரலைவாய் செந்தில் மாநகரம் என்றும், சமஸ்கிருத நூல்களில் ஜெயந்தி புரம், சிந்துபுரம் என்றும், பிற்கால பாண்டியர் கல்வெட்டுகளில் திருபுவன மகாதேவி சதுர்தேவி மங்கலம் என்றும், திருப்புகழில் திருச்செந்தூர் என்றும் பல்வேறு பெயர்களில் வழங்கப்படுகின்றது. நக்கீரர், அருணகிரி நாதர் போன்றோர் திருச்செந்தூர் முருகனைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.
தல
வரலாறு
அக்காலத்தில்
தேவர்களுக்கு அசுரர்கள் பல தொல்லைகளை இழைத்து
வந்தனர். தேவர்களுக்கு தொல்லை கொடுத்த முக்கிய அசுரன் சூரபத்மன் ஆவான். அவன் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து வரம் பெற்றவனாவான். எனவே தேவர்கள், சூரபத்மன் தங்களுக்கு இழைத்த அநீதிகளை முறையிட்டு அவனை அழிக்க சிவபெருமானை வேண்டினார்கள். சிவபெருமான் தேவர்களின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டார். தேவர்களுக்கு தொல்லைகள் கொடுத்து வந்த அசுரவம்ச அரசன் சூரபத்மனை அழிக்க வேண்டி, சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகளில் இருந்து முருகப்பெருமானை அவதரிக்கச் செய்தார்.
குழந்தையான
முருகப் பெருமானை கார்த்திகைப் பெண்கள் சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார்கள். பின்னர் சிவனார் தேவர்களின் வேண்டுதலின் படி சூரபத்மனை அழிக்க முருகப் பெருமானுக்கு உத்தரவிட்டார். சிவபெருமானின் கட்டளையை ஏற்று முருகப் பெருமான், சூரபத்மனை அழிக்க திருச்செந்தூருக்கு வருகிறார்.
அப்போது
தேவர்களின் குரு வியாழ பகவான் முருகனின் அருளாசி பெற வேண்டி தவத்தில் இருந்தார். முருகப் பெருமானும் அவருக்குக் காட்சி தந்து அருள் வழங்கினார். பின்னர் திருச்செந்தூரை படை வீடாகக் கொண்டு தனது படையுடன் தங்கி சூரபத்மனை அழிக்க
வியூகம் வகுத்தார். அசுரர்களின் வரலாற்றை அவர் வியாழ பகவானிடமிருந்து கேட்டு அறிந்து கொண்டார்.
பின்னர்
முருகப் பெருமான், தனது நவ வீரர்களில் ஒருவரான
வீரபாகுவை சூரபத்மனிடம் தூதுவனாக அனுப்பி, தேவர்களுக்கு கொடுக்கும் தொல்லையை நிறுத்த வேண்டும் என்ற தகவலைத் தெரிவித்தார். சூரபத்மன், முருகப் பெருமானின் கோரிக்கையை ஏற்கவில்லை.
இறுதியாக
முருகப் பெருமான் சூரபத்மன் மீது போர் தொடுத்தார். சூரபத்மன், சிவபெருமானிடம் பெற்ற வரத்தைக் கொண்டு மாமரமாக உரு மாறினான். முருகப் பெருமான் அவ்வாறு மாமரமாக உரு மாறிய சூரபத்மனை வதம் செய்யாமல், அவனது ஆணவத்தை அழித்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுள் ஆட்கொண்டு வைத்துக் கொண்டார். அதனால் சேவற்கொடியோன் என்றும் முருகனார் அழைக்கப்படுகிறார்.
இந்நிகழ்விற்கு
பிறகு வியாழ பகவான், முருகப் பெருமானை திருச்செந்தூரில் தங்கி அருள் புரியும் படி வேண்டுகோள் விடுத்தார். அதன் பின் வியாழ பகவானின் கட்டளைப் படி விஸ்வகர்மா இக்கோவிலை நிர்மாணித்தார்.
சூரபத்மனை
அழித்ததனால் உண்டான வெற்றியைப் புகழும் விதமாக முருகப் பெருமான் ஜெயந்தி நாதர் என்றும் அழைக்கப்படுகிறார். (ஜெயந்தி-வெற்றி) பிற்காலத்தில் இந்த பெயர் செந்தில் நாதன் என்றும், இந்த இடம் ஜெயந்தி புரம் என்றும் அழைக்கப்பட்டது. காலப் போக்கில் மருவி திருச்செந்தூர் என அழைக்கப்படுகிறது.
கோயிலின்
அமைப்பு
முருகனுக்குரிய
அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரை கோயிலாகவும், பிற ஐந்தும் மலைக் கோயிலாகவும் அமைந்துள்ளது. 157 அடி உயரம் கொண்ட இக்கோயில் கோபுரம் ஒன்பது தளங்களைக் கொண்டுள்ளது. முருகப் பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபூஜை செய்தார்.
முருகன்
சந்நிதிக்கு வலப்புறத்தில் பஞ்ச லிங்க சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் உள்ளன.
இத்தலத்தில்
பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி முதலிய திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா 12 நாட்கள் கொண்டாடப் படுகிறது. முதல் ஆறு நாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன் தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள் சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என 12 நாட்கள் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
அறுபடை
வீடுகளில் ஒன்றாகத் திகழும் திருசெந்தூர் சுப்ரமணிய சுவாமியை தரிசனம் செய்து வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறுவோமாக.
Comments
Post a Comment