சென்டினல் மக்கள் ( THE SENTINELESE)
யார் இந்த சென்டினல் மக்கள்? இவர்கள் எங்கு வாழ்கிறார்கள்? இந்தியப் பெருங்கடலில் உள்ள அந்தமான் நிக்கோபர் தீவுகளில் ஒன்று தான் வடக்கு சென்டினல் தீவு. இங்கு வாழும் மக்களே சென்டினல் பழங்குடியின மக்கள். இவர்கள் வெளியுலக மக்களைப் பார்க்க விரும்பாமல் அந்தமான் தீவின் அடர்ந்த காடுகளில் வாழ்கின்றனர்.
இப்பழங்குடியின
மக்கள் வில் அம்பு கொண்டு காட்டு விலங்குகளை வேட்டையாடி உண்டு வாழ்கின்றனர். சென்டினல் மக்கள் வெளி உலக மக்களிடம் தொடர்பு கொள்வதை வெறுக்கிறார்கள். இந்திய அரசாங்கம் இம்மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அத்தீவிற்கு யாரும் செல்லக் கூடாது என தடை விதித்துள்ளது.
வெளி உலக தொடர்பின்றி வாழும் அப்பழங்குடியின மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால், இச்சட்டதை இந்திய அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.
2004 ம்
ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை இம்மக்களைப் பாதிக்கவில்லை. அவர்கள் முன் கூட்டியே சுனாமி வருவதை அறிந்து, உயரமான பகுதிகளிலும், மரங்களின் மீது ஏறியும் உயிர் பிழைத்துள்ளனர்.
சென்டினல்
பூர்வீக பழங்குடியின மக்கள் முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அந்தமானில் வாழ்ந்து வருவதாக ஆய்வாளர்கள கூறுகின்றனர். சென்டினல் மக்கள் ஆப்பிரிக்காவின் கருப்பின மக்களைப் போல உருவமும் நிறமும் கொண்டுள்ளனர். இப்பழங்குடியின மக்கள் பேசும் மொழிக்கும், அந்தமான் பழங்குடியின மக்கள் பேசும் மொழிக்கும் அதிக வேறுபாடு உள்ளது.
பல
முறை இம்மக்களைத் தொடர்பு கொள்ள முயன்றும், அவர்கள் எதனையும் ஏற்கவில்லை. 1967 ல் திரிலோகநாத் பண்டிட்
என்னும் மானுடவியலாளர் தலைமையில் ஓர் குழு சென்று, தேங்காய்களை வழங்கியுள்ளனர். அதனை மட்டும் அம்மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். சுனாமிக்குப் பின் அம்மக்கள் எவ்வாறு உள்ளனர் என்பதை அறிய, இந்திய அரசு ஹெலிக்காப்டர் மூலம் ஆய்வு நடத்தியது. அப்போது அம்மக்கள் ஹெலிக்காப்டரை நோக்கி அம்பு எய்துள்ளனர். அவர்கள் ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் இருப்பதாக அவ்வாய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2001 ம்
ஆண்டு இந்திய அரசின் மக்கட் தொகைக் கணக்கெடுப்பின் படி 39 பேர் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஆய்வாளர்கள் சென்டினல் தீவில் 400 பேர் முதல் 500 பேர் வரை இருப்பதாகக் கூறியுள்ளனர்.
2018 ம்
ஆண்டு ஜான் அலென் சா என்னும் அமெரிக்கர்,
சென்டினல் மக்களை கிறித்துவ மதத்திற்கு மாற்ற, அத்தீவிற்கு சட்ட விரோதமாகச் சென்றார். அம்மக்கள் அவரை வர வேண்டாம் என
விரட்டியடித்தும் அவர் திரும்பத் திரும்ப அங்கு சென்றதால் அம்மக்களால் கொல்லப்பட்டார்.
இந்திய அரசு
இத்தீவிற்குச் செல்வதைத் தடை செய்துள்ளது. அதனை மீறிச் செல்பவர்களுக்கு தண்டனையும்,
அபராதமும் விதித்துள்ளது. மேலும் அந்தமான் பாதுகாப்புச் சட்டப்படி இப்பகுதி பாதுகாக்கப்பட்ட
பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்டினல் தீவினைச் சுற்றி 3 கி.மீட்டர் பரப்பளவிற்கு
தடை செய்யப்பட்டப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீவிற்கு
சுற்றுலா பயணிகள் யாரும் செல்லவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்டினல் தீவு மக்கள கற்கால மக்களைப் போல் கற்களையும், வில் அம்புகளை (விஷ அம்புகள்) ஆயுதமாகவும் பயன்படுத்துகின்றனர். இவர்கள் 300 அடி தூரத்திற்கு குறி பார்த்து அம்பு எய்தும் ஆற்றல் உடையவர்களாவர். இம்மக்கள் இலை தழைகளை ஆடையாகவும், இங்கு கிடைக்கும் பழங்கள், காட்டுப் பன்றி, மீன்கள், தேங்காய், தேன் முதலியவற்றினை உணவாகவும் உண்டு வாழ்ந்து வருகின்றனர்.
சென்டினல்
மக்களைப் பற்றி திரிலோக்நாத் பண்டிட், தனது அனுபவத்தில் இருந்து அந்த பழங்குடி குழுவானது அமைதியை விரும்பக்கூடியது என்றும், அவர்கள் பயங்கரமானவர்கள் என்று சித்தரிப்பது நியாயமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்
அவர் " நாங்கள் அவர்களுடன் (சென்டினல் தீவு மக்கள்)தொடர்பு கொண்ட போது, அவர்கள் எங்களை எச்சரித்தனர். ஆனால் எங்களை கொலை செய்யவோ காயப்படுத்தவோ செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை. எப்போதெல்லாம் அவர்கள் ஆத்திரமடைந்தார்களோ அப்போதெல்லாம நாங்கள் பின் வாங்கி விட்டோம்" என
பிபிசி உலக சேவையிடம் தெரிவித்தார் பண்டிட்.
" அமெரிக்காவில்
இருந்துஇத்தீவிற்கு வந்து
மரணமடைந்த அந்த இளைஞனுக்காக நான் வருத்தப்படுகிறேன். அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வாய்ப்பிருந்தும், விடாப்பிடியாக இருந்ததால் அவர் தன் வாழ்க்கையையே விலையாக் கொடுத்திருக்கிறார்" என்றார் பண்டிட்.
முப்பதாயிரம்
ஆண்டுகள் பூர்வீகப் பழமை கொண்ட சென்டினல் மக்களின் நலனைப் பாதுகாப்போம்.