காபி பற்றிய சுவையான தகவல்கள் (INTERESTING FACTS ABOUT COFFEE)


நாம் தினமும் காலையில் சுவைத்து மகிழும் காபி, நமக்கு புத்துணர்வையும், ஆற்றலையும் அளிக்கிறது. காபி முதன் முதலில் எவ்வாறு கண்டறியப்பட்டது என்னும் செய்தி நமக்கு வியப்பையும், ஆச்சரியத்தையும் அளிக்கலாம். உலகிலேயே அதிக அளவு இறக்குமதி, ஏற்றுமதி செய்யப்படும் பொருளாக பெட்ரொலியம் உள்ளது. அதற்கு அடுத்த படியாக உலகிலேயே அதிகமாக விற்று, வாங்கக் கூடிய பொருளாக காபி இரண்டாவது இடத்தில் உள்ளது.

காபி உலகில் ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளில் ஏறக்குறைய 10 மில்லியன் ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. இன்று 100 மில்லியன் மக்களின் வாழ்க்கை ஊதியம் காபிப் பயிரை ஒட்டி நடக்கிறது. தினமும் தோராயமாக 2.25 பில்லியன் கோப்பை ( cup) காபிகள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் சுவைக்கப்படுகின்றன.

காபி எவ்வாறு உலகுக்கு அறிமுகமானது? அந்த சுவையான கதையை இனி பார்ப்போம்.

ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியா நாட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்கள் சிலர் ஒரு நாள், தங்கள் ஆடுகளில் சில அதிக ஆட்டத்துடன் உலாவி வந்ததையும், இரவிலும் தூங்காமல் இருந்ததையும் கண்டு வியந்தார்கள். பின் அந்த ஆடுகள் ஒரு வித சிவப்பு நிறப் பழங்களை உண்டதனால் இவ்வாறு சுறுசுறுப்புடன் இருக்கின்றன என்பதனைக் கண்டறிந்தார்கள்.

எனவே இடையர்கள் அந்த சிவப்பு நிறப் பழங்களை எடுத்துக் கொண்டு போய் தங்கள் மதத்தலைவரிடம் காண்பித்தனர். அதனைக் கண்ட மதத்தலைவர், அந்த சிவப்பு நிறப் பழங்களை தீமையின் இருப்பிடம் எனக் கூறி அப்பழங்களைத் தீயில் இட்டார். காபிப் பழங்களைத் தீயில் இட்டவுடன் அதிலிருந்து வந்த நறு மணம் அனைவரையும் கவர்ந்தது. இவ்வாறு காபி முதலில் உலகுக்கு அறிமுகமானது.  இது கி.பி. 9ம் நூற்றாண்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது. எத்தியோப்பியாவில் இருந்து எகிப்துக்கும், ஏமன் நாட்டிற்கும் பரவியது. பின்னர் ஏறத்தாழ 15ம் நூற்றாண்டளவில் ஐரோப்பாவிற்கும், பிற நாடுகளுக்கும் காபி பரவியது.

தற்போது உலகிலேயே காபி உற்பத்தியில் பிரேசில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிலும் காபிச் செடிகள் அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்களின் வரவிற்குப் பின்னே இந்தியாவில் காபி அறிமுகமானது. அதற்கு முன்பு வரை இந்திய மக்கள், கேழ்வரகு கூல்,  வடித்த கஞ்சி முதலிய ஆரோக்கியமான பானங்களைப் பருகி வந்தனர். காபியால் சில நன்மைகள் இருப்பதாகக் கூறப்படினும், அதனை அளவோடு எடுத்துக் கொள்வதே சாலச் சிறந்தது.

Popular posts from this blog

நளதமயந்தி கதை (NALA THAMAYANDHI STORY)

சென்டினல் மக்கள் ( THE SENTINELESE)

திருப்பாண்டிக் கொடுமுடி (KODUMUDI TEMPLE)