யாகந்தி உமாமகேஸ்வரர் ஆலயம் - SRI YAGANTI UMA MAHESWARA TEMPLE
இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவாலயம் யாகந்தி உமா மகேஸ்வரர் கோயிலாகும். விஜயநகரப் பேரரசின் அரசனான ஹரிஹர புக்க ராயரால் 15ம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் வைணவ மரபுகளின் படி கட்டப்பட்டுள்ளது.
கோயில் வரலாறு
இக்கோயில் குறித்து நிலவும் கதையின் படி, அகத்திய முனிவர் வேங்கடப் பெருமாளுக்கு கோயில் கட்ட விரும்பினார். ஆனால் எத்தனையோ தடவை முயன்றும் சிலை முழுமை பெறவில்லை. எனவே அகத்தியர் சிவபெருமானை நோக்கி தவம் செய்தார். சிவபெருமான் அகத்தியருக்குக் காட்சி அளித்து இவ்விடம் கயிலை போல உள்ளதால் திருமாலுக்கு உகந்த இடம் இல்லை எனக் கூற, அகத்தியர் சிவபெருமானை உமாதேவியுடன் அங்கேயே தங்குமாறு வேண்டினார். சிவபெருமானும், உமாமகேஸ்வரராக ஒரே கல்லில் அர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இக்கோயிலின் கட்டிடக் கலை சிறப்புக்கள் பலவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது. புஷ்கரிணி என்னும் சிறிய குளம் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. மலையிலிருந்து வரும் நீர் நந்தியின் வாய் வழியாக இந்த புஷ்கரிணியில் விழுவது போல அமைக்கப்பட்டுள்ளது. மலையிலிருந்து வரும் நீரானது ஆண்டு முழுவதும் இங்குள்ள புஷ்கரிணியில் நிறைந்து வளம் அளிக்கின்றது. இந்த புஷ்கரிணியில் குளிப்பது நன்மை தரக்கூடியதாகவும், புனிதமானதாகவும் மக்கள் நம்புகின்றனர். புஷ்கரிணியில் நீராடிய பின் இறைவனை வணங்குகின்றனர்.
யாகந்தி கோயிலைச் சுற்றிலும் உள்ள குகைகள்;
அகத்தியர் குகை
இங்கு அகத்தியர் சிவனை நோக்கி தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் குகையைக் காண 120 செங்குத்தான படிகளை ஏறிச் செல்ல வேண்டும். குகையினுள் தேவியின் சிலை ஒன்று உள்ளது.
வெங்கடேஸ்வரர்
குகை
இக்குகையினை அகத்தியர் குகையுடன் ஒப்பிடும் போது மிகப் பெரியது. இங்குள்ள வெங்கடேஸ்வரர் சிலையானது திருமலை வெங்கடேஸ்வரர் கோவிலுக்கும் முற்பட்டது என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் சிலையின் அடிப்பகுதி சேதமுற்றிருப்பதால் வணங்கப்படுவது கிடையாது.
இக்கோவிலானது தெலுங்கு திரைப்படமான புஷ்பா திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ளது.
வழி வழியாக வரும் சில நம்பிக்கைகள்;
வளரும் நந்தி
கோவிலின் முன் புறம் உள்ள நந்தி சிலையானது தொடர்ந்து வளர்ந்து வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இந்த சிலை தற்போது இருக்கும் அளவை விட மிகச் சிறியதாக முன்பு இருந்தாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் சில தகவல்களை வெளிவந்துள்ளன. இந்த நந்தி சிலை வளருவதற்கும், இச்சிலை செதுக்கப்பட்ட பாறைக்கும் சம்பந்தம் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏனெனில் சிலை செதுக்கப்பட்ட பாறையானது வளரும் தன்மை கொண்டது என்று ஆய்வில் கூறியுள்ளனர். இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் ஆய்வு செய்ததில் இப்பாறையானது இயற்கையாகவே வளரும் தன்மை கொண்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இப்பாறை 20 வருடங்களில் 1 அங்குல உயரம் வளர்ந்துள்ளதாகத் தெரிவத்துள்ளனர்.
கோவிலின் குறிப்புப் பலகையில், முன்பு இந்த நந்தி சிலையை வலம் வர முடிந்ததாகவும், தற்போது வளரும் நந்திக்கு இடம் கொடுப்பதற்காக ஒரு தூண் அகற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
காகங்கள் இப்பகுதியில் இருப்பதில்லை என்று கூறப்படுகிறது. அகத்திய முனிவர் இங்கு தவம் செய்த போது காகங்கள் தொந்திரவு செய்ததால், அவர் காகங்கள் இப்பகுதிக்கு வரக் கூடாது என சபித்தார் என்னும் கதை நிலவுகிறது. காகம் சனி பகவானின் வாகனம் ஆகும். எனவே காகங்கள் எவ்வாறு நுழைய முடியாதோ அது போல் சனி பகவானும் வர மாட்டார் என்கின்றனர்.
கடல் மட்டத்திலிருந்து 2830 அடி உயரத்தில் உள்ள யாகந்தி உமாமகேஸ்வரர் ஆலயத்தினை வணங்கி நன்மைகள் பலவற்றினையும் பெறுவோமாக.


Comments
Post a Comment