மானசரோவர் (MANSAROVAR)
உலகின் மிக உயரமான இடத்தில் உள்ள நன்னீர் ஏரி மானசரோவர் ஏரி ஆகும். இது கயிலை மலையின் அருகில் திபெத் நாட்டில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 14948 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரியானது அதிகபட்சமாக 300 அடி ஆழம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மானசரோவர் ஏரியை பக்தர்கள் வலம் வரும் போது (பரிக்ரமா) சுகு, ஜெய்தி ஆகிய இரண்டு இடங்களில் கயிலை மலையின் பிம்பத்தை மானசரோவர் ஏரியில் காண முடியும். இயற்கை அழகோடு இறைவனை காண்பதென்பது ஓர் அற்புத நிகழ்வாகும். சிவமும், சக்தியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் தத்துவத்தினை இது உணர்த்துகிறது. இந்த ஏரி பார்வதி தேவியின் சக்தி பீடங்களில் ஒன்றாக உள்ளது.
மானசரோவர் ஏரி அருகே மற்றொரு ஏரி உள்ளது. இது இராட்சதலம் ஏரி என அழைக்கப்படுகிறது. இவ்வேரியை இராட்சதர்கள் வணங்குவதாக நம்பப்படுகிறது. இராட்சதலம் ஏரியின் தீவு ஒன்றில இராவணன் தவம் புரிந்ததாக ஒரு கதை உள்ளது. கயிலை யாத்திரை செல்லும் பக்தர்கள் மானசரோவர் ஏரியில் மட்டுமே புனித நீராடுவார்கள். இந்த இராட்சதலம் ஏரியில் நீராடும் வழக்கம் கிடையாது.
( படம்:வலப்புறம் மானசரோவர் ஏரியும், இடப்புறம் இராட்சதலம் ஏரியும்)
மானசரோவர் ஏரியானது கடல் மட்டத்தில் இருந்து 4590 மீட்டர் உயரத்தில் உள்ளது. மே மாதம் முதல் செப்டம்பர் வரை மட்டுமே மானசரோவர் ஏரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. குளிர் காலங்களில் இந்த ஏரியானது உறைந்து காணப்படும். மிக உயரத்தில் உள்ள தூய நீர் ஏரி இதுவாகும். இதன் சுற்றளவு 88 கிலோ மீட்டர் ஆகும். மானசரோவர் ஏரியிலிருந்து சட்லஜ், பிரம்மபுத்திரா, சிந்து போன்ற ஆறுகள் உற்பத்தியாகின்றன.
மானசரோவர்- பெயர் காரணம்
மானசரோவர் என்ற சொல் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததாகும். இது 'மானா' மற்றும் 'சரோவர்' என்னும் இரு சொற்கள் சேர்ந்து உருவானது. மானா என்றால் மனம் என்றும், சரோவர் என்றால் ஏரி என்றும் பொருள்.
இந்து மத புராணங்களின் படி, முதலில் ஏரி, படைக்கும் கடவுள் பிரம்மாவின் மனத்தில் தோன்றியது. பின்பு இந்த ஏரியானது பூமியில் தோற்றுவிக்கப்பட்டது.
புத்த மதம், மற்றும் சமண மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் இந்த ஏரி புனித தலமாக உள்ளது. எனவே அவர்களும் யாத்திரை மேற்கொள்கின்றனர்.
இந்து மதத்தின் படி மானசரோவர் ஏரியை தூய்மைக்கு சான்றாகக் கூறுகின்றனர். கயிலை மலையைப் போலவே மானசரோவர் ஏரியும் புனிதத் தலமாகக் கருதப்படுகிறது. இந்த ஏரி வட்ட வடிவில் அமைந்துள்ளது. இங்கு இந்தியா, நேபாளம், திபெத் மற்றும் அண்டை நாடுகளில் இருந்தும் மக்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஏரியில் நீராடினாலோ, அல்லது இந்த ஏரியின் நீரை பருகினாலோ ஒருவர் செய்த பாவங்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. இந்த புனிதப் பயணம் "கயிலை மானசரோவர்" யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.


Comments
Post a Comment