கரிகால சோழன் (KARIKALA CHOLAN)
"தனக்கு ஒப்பாரும் இல்லை, தனக்கு மிக்காரும் இல்லை" என்ற புகழினைப் பெற்றவன் கரிகால சோழன். கரிகால சோழனின் காலம் சங்க காலத்தைச் சேர்ந்ததாகும். இவர் தந்தையின் பெயர் இளஞ்சேட்சென்னி. இச்சோழ மன்னனுக்கு பெருவளத்தான், திருமாவளவன், கரிகாற் பெருவளத்தான், மாவளத்தான், இயல் தேர் வளவன், கரிகாலன் என்னும் பட்டப் பெயர்களும் உண்டு. கரிகால சோழன் காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டு வந்தான். கரிகால சோழனின் காலம் என்பது கி.மு.270 முதல் கி.பி.180 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
தமிழ் நாட்டில் இது காரும் ஆண்ட மன்னர்களில் இவனைப் போல வீரமும், புகழும் உடைய மன்னர் யாரும் இல்லை என்பதே தமிழுலகு முழுவதும் கொண்ட பேச்சாகும். சோழப் பேரரசை மீண்டும் நிலைநாட்டியதோடு, வடநாட்டுக்கும் சென்று, இமயத்தில் புலிக் கொடியை நாட்டிய பெருமை கரிகாற் பெருவளத்தானையேச் சேரும்.
கரிகால சோழனின் ஆட்சியில் சோழ வள நாட்டின் புகழ் கடல் கடந்தும் பரவியது. இயற்கையாகவே சோழ நாட்டு வளத்தைக் காணவும், சோழ நாட்டு கரும்பையும், நெல்லையும், துகிலையும், கலனையும் வாங்கிச் செல்லவும் அயல் நாட்டு மக்கள் வருவார்கள். கரிகாலன் காலத்தில் பின்னும் அதிகமாக மக்கள் வந்தார்கள்.
சோழ நாட்டின் வளத்தை பெருக்கும் முயற்சிகளில் கரிகாலன் ஈடுபட்டான். முதலில் காவிரியின் நீரை ஒழுங்குபடுத்த நினைத்து அதன் இருமருங்கும் கரை கட்டினான். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கற்பாறைகளைக் கொண்டு கல்லணை கட்டி நீர் பாசனத்திற்கு முன்னோடியாகத் திகழ்ந்தார் என்கிற பெருமையைக் கொண்டவர் 'கரிகால சோழன்'ஆவார். சங்க நூல்களில் அவன் காவிரிக்கு இருமருங்கும் கரை கட்டியதாக கூறப்பட்டுள்ளது. காவிரியாற்றின் கரைகளை உயர்த்திக் கட்டினான் என்பதை எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தெலுங்கு மன்னன் புண்ணிய குமரனின் "மலேபாடு" பட்டயங்களில் காண முடிகிறது.
கரிகாலன் என்பதற்கு கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று. கரிகாலன் பற்றிய சில குறிப்புக்கள் பட்டினப்பாலை, பொருநராற்றூப்படை, கலிங்கத்துப் பரணி, பழமொழி நானூறு முதலான நூல்களில் உள்ளன.
இவற்றில் கரிகாலனுடைய வரலாற்றை தெரிந்து கொள்ளச் சிறந்த ஆதாரமாக இருப்பவை பொருநராற்றுப்படையும், பட்டினப்பாலையும் ஆகும். புறநானூற்றில் உள்ள பாடல்கள் சில கரிகாலனை நேர்முகமாகப் பாடுகின்றன. மற்ற தொகை நூல்களில் அங்கங்கே உவமையாகவும், பிறவாகவும் கரிகாலனைப் பற்றிய செய்திகள் துண்டு துண்டாகக் கிடைக்கின்றன. சிலப்பதிகாரத்திலும் சில செய்திகள் கிடைக்கின்றன.
பழமொழி நானூறு கரிகாலன் பற்றி கூறுவது;
சோழன் மகன் பகைவரால் தீயினால் சுடப்பட்ட இல்லத்திலிருந்து பிழைத்து மறைவாக வாழ்ந்தார் என்றும், பின்னர் 'பிடர்தலை' என்ற பெயர் பெற்ற பட்டத்து யானையால் மாலை சூட்டப்பட்டு சோழ நாட்டின் அரியணை ஏறி செங்கோல் ஆட்சி செலுத்தினார் என்றும் கூறப்பட்டுள்ளது.
வெண்ணிப் போர்
கரிகால சோழனின் ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப் போர் ஆகும். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் மூவேந்தர்க்கு தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே ஆகும். இப்போரில் தோல்வியுற்ற சேரமான் பெருஞ்சேரலாதன் தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கொண்டு வடக்கிருந்து உயிர் நீத்தார். இதனை கரிகாலனின் தோழரும், வெண்ணிப் போரை நேரில் கண்டவருமான வெண்ணிக் குயத்தியார் என்னும் புறநானூற்றுப் புலவர் விளக்குகிறார்.
கரிகாலனின் மகள் ஆதிநந்தி சங்க காலப் பெண் புலவர்களில் ஒருவராக விளங்கினார். கரிகால சோழன் பகைவரை வென்றார். காவிரிப்பூம்பட்டினத்தை அழகு படுத்தினார். காவிரிக்கு கரை கட்டினார். கல்லணையைக் கட்டி நீர்பாசனத்தை அமைத்தார். உறையூரை நிறுவி பெரு நகராக்கினார். பழஞ்சோழர்களில் இணையின்றி வாழ்ந்த கரிகாலன் சோழ வள நாட்டின் புகழையும், சிறப்பையும் பாரெங்கும் ஓங்கும் படி செய்தார்.
Comments
Post a Comment