அஜந்தா குகைகள் (Ajantha caves)
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் இருந்து 107 கி.மீ தொலைவில் அஜந்தா கிராமம் உள்ளது. இக்குகைகளில் புத்த மத சிற்பங்களும், ஓவியங்களும் நிறைந்துள்ளன. இவை குகைகளைக் குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரை கோவில்கள் ஆகும். இங்குள்ள சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைபடுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று நிகழ்வுகளை சித்தரித்தும் உருவாக்கபட்டவையாகும். அஜந்தா குகைகள் யுனஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜந்தா குகைகள் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு
1819 ம் ஆண்டு ஆங்கிலேய அதிகாரி ஒருவர் புலி வேட்டைக்காக அஜந்தா காட்டுக்குள் சென்றார். ஒரு புலியைத் துரத்திக் கொண்டு சென்றார். அது அவரை ஏமாற்றி விட்டு மறைந்து கொண்டது. அங்கிருந்த மாடு மேய்க்கும் சிறுவன், புலிகள் தங்குமிடம் என அஜந்தா குகைகளைக் காட்டினான்.
புதர் மண்டிக் கிடந்த பத்தாவது குகைக்குள் சென்ற அவர் அங்குள்ள ஓவியங்களைக் கண்டுபிடித்தார். ஆயிரத்து இருநூறு வருடங்களாக மறைந்து கிடந்த அஜந்தா குகைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
வாகுர் ஆற்றின் கரையில் குதிரைக் குளம்பு வடிவில் சுமார் 30 குகைகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்குகைகளில் ஓவியங்கள் தரையைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன. பாறைகளிலும், கூரைகளிலும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
அஜந்தா ஓவியங்கள் வரையப்பட்ட விதம்
கற்சுவர் மேல் களிமண்ணும், சாணியும் கலந்த கலவை பூசப்பட்டு, அதன் மேல் சுண்ணாம்பு சாந்து பூசப்படுகிறது. பின்னர் பல வண்ணக் கூழாங்கற்களை அரைத்து உருவாக்கப்பட்ட நிறங்களைக் கொண்டு ஓவியங்களும், அதன் வண்ணங்களும் வரையப்பட்டுள்ளன. சுண்ணாம்பு சாந்து இறுகுவதற்குள் ஓவியம் வரையப்படுவதால், கூழாங்கல் சாந்து உறுதியாகவே ஒட்டிக் கொள்கிறது. எனவே இவை தாவர வண்ணங்கள் அல்ல. இயற்கை வண்ணங்களேயாம். எனவே தான் இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்தும் அதன் வண்ணம் மங்காமலிருக்கின்றன.
ஐரோப்பியர்களின் முயற்சியால் அஜந்தா குகை ஓவியங்களின் மேன்மையும், சிறப்பும் வெளி உலகுக்கு தெரியவந்தது. இதற்கு முன்பு வரை இத்தாலிய ஓவியக்கலை தொன்மை வாய்ந்தது என ஐரோப்பியர்கள் போற்றி வந்தனர். அஜந்தா குகை ஓவியங்களின் சிறப்பினைக் கண்ட பின்னர், இத்தாலிய ஓவியக்கலை தோன்றுவதற்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்னரே, இந்திய ஓவியக்கலை முழு வளர்ச்சி பெற்றிருந்தது என உலக வல்லுனர்கள் ஏற்றுக்கொண்டனர்.
அஜந்தா ஓவியங்கள் அனைத்தும் உயிரோவியங்களாகவே காணப்படுகின்றன. பெண்களின் ஓவியங்களே அஜந்தா குகையின்சிறப்பாகும். பெண்களின் மனநிலையையும், எண்ணற்ற அழகியத் தோற்றங்களையும் ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர்.
அஜந்தாவின் இன்றைய நிலை
அஜந்தாவில் இன்று ஐந்து குகைகளில் ஒவியங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலான ஓவியங்கள் இன்று சிதைந்த நிலையிலேயே உள்ளன. இங்குள்ள ஓவியங்களில் போதிசத்வ வஜ்ரபாணி, போதிசத்வ பத்மபாணி, கரிய அழகி போன்ற ஓவியங்கள் புகழ் பெற்றவையாகும்.
அஜந்தா குகை ஓவியங்கள் இந்தியாவின் தொன்மையையும், ஓவியக்கலையின் சிறப்பினையும் பறைசாற்றிக் கொண்டு, கம்பீரமாக உள்ளது என்பதில் ஐயமில்லை.