அழகர் கோவில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு பழைமையான ஆலயம் ஆகும் . ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் பல பெருமைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது . 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இத்தலம் " திருமாலிருஞ்சோலை " என்றும் அழைக்கப்படுகிறது . இங்கு கள்ளழகராக அவதாரம் எடுத்து எழுந்தருளியிருக்கும் சுந்தரராஜ பெருமாள் சங்கு , சக்கரம் , வில் , வாள் , கதை என பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார் . மதுரை மாவட்டத்தில் சித்திரைத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த விழாவாகும் . மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் , அதைத் தொடர்ந்து வரும் கள்ளழகர் ஆற்றில் இறங்கு வைபவமும் தூங்கா நகரமான மதுரையில் வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது . தன் தங்கை மீனாட்சிக்கும் , சுந்தரேஸ்வர பெருமானுக்கும் திருமணம் நடக்கும் செய்தியைக் கேள்விப்பட்டு , அழகர் சுந்தரராஜப் பெருமாள் , கள்ளழகர் திருக்கோலத்துடன் அழகர் மலையிலிருந்து இறங்கி , சகல கொண்டாட்டத்துடன் மதுரையை நோக்கி வருகிறார் . வரும் வழி எங்கும் தம் பக்தர்களுக்கு காட்ச...